Sunday, January 24, 2010

எங்கே செல்லும்....

எங்கே செல்லும்....

முன் குறிப்பு: கலைஞரின் ஓய்வு அறிக்கையைப் போல இழுத்துக் கொண்டே இருக்காமல், விசா அவர்கள் கொடுத்த யோசனையின் படி ஒரே கதையை ஆளுக்கொரு பகுதியாக எழுத ஒரு முயற்சி. நான் துவங்குகிறேன் அடுத்து தொடர நினைப்பவர்கள் கையைத் தூக்கிவிட்டு தொடரலாம்.

************************************************************************************
RULES:
1. தொடர விரும்புபவர்கள் கடைசியாக யார் எழுதியிருக்கிறார்களோ அந்தப் பதிவில் சென்று பின்னூட்டம் இடுங்கள்.
2. கடைசியாகப் பதிவை எழுதியவர் யார் தொடரலாம் என்பதை தேர்ந்தெடுப்பார்.
3. முந்தைய பாகங்களுக்கான சுட்டியையும், அடுத்த பாகத்தின் சுட்டியையும் (யாரவது தொடர்ந்த பின்னர்) பதிவில் கட்டாயமாக இட வேண்டும்.
4. ஒரு எச்.டி.எம்.எல் கேட்ஜட் உருவாக்கத்தில் இருக்கிறது. உருவான பின் அதையும் உங்கள் வலைப்பூவில் கட்டாயம் சேர்க்க வேண்டும்
5. மேலே உள்ள விதிகள் அனைத்தும் தொடர் பாகத்தை ஒருவருக்கு மேற்பட்டவர்
எழுதிவிடக்கூடாது என்பதற்காகவே.


**********************************************************************************

பாகம் - 01 
எழுயதிது முகிலன் (முகிலனின் பிதற்றல்கள்)


ஸ்டேடியத்தில் ரசிகர்களின் ஆரவாரம் பெரும் சத்தமாக இருந்தது. ஒரு சீராக அவன் பேட்டை ஸ்டம்புக்கு முன் அடிக்கும் சத்தமும் இதயத் துடிப்பும் ஒத்திருப்பது போல இதயம் சிறிது மெதுவாகவே துடித்தது. இன்னும் ஒன்பது ரன்கள் எடுக்க வேண்டும். இருப்பதோ இரண்டே பந்துகள். பின்னால் விக்கெட் கீப்பர் என்னவோ சொல்வது தூரத்தில் இருந்ததால் சரியாகக் காதில் விழவில்லை.

சோஹைப் அக்தர் கிட்டத்தட்ட ஃபோர் லைனில் இருந்து ஓடி வந்து கொண்டிருந்தான். அவன் கீழுதட்டைக் கடித்துக் கொண்டிருப்பதிலேயே தெரிந்து விட்டது யாக்கர் தான் போடப் போகிறான். அவன் தயாரானான்.

க்ரீஸுக்கு அருகில் வந்துவிட்டான் அக்தர். கையைச் சுற்றி பந்தை வீசப் போகிறான். வீசி விட்டான். அந்தோ பரிதாபம் யாக்கர் லெங்க்த்தில் இல்லாமல் ஃபுல் டாஸாகிவிட்டது. காலை க்ளியர் செய்து பேட்டை வீசினான்.

அதே சமயம் அம்பயரின் “நோ” என்ற குரல் கேட்டது.

பேட்டின் மத்தியில் பந்து பட்டு விர்ரென்று கிளம்பியது. பந்து எங்கே போகிறது என்பதைப் பார்க்காமல் ஓடத்துவங்கினான். பந்து லாங்க்-ஆன் திசையில் பவுண்டரியைத் தாண்டி ஸ்டாண்டில் அமர்ந்திருந்த ரசிகர்களின் மத்தியில் விழுந்தது. டெல்லி ரசிகர்கள் கத்தித் தீர்த்து விட்டனர். நோ பாலின் புண்ணியத்தில் ஏழு ரன்கள். இனி இரண்டு பந்துகளில் இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி.

அடுத்த பந்தை அக்தர் ஷார்ட்டாகப் பிச் செய்து நெஞ்சுயரத்திற்கு எழும்பும் ஒரு பவுன்சராகப் போட்டான். அவன் புல் செய்ய முயன்று மிஸ்ஸாகி கீப்பரின் கையில் தஞ்சம் புகுந்தது பந்து.

ஒரு பந்து, ஒரு ரன்.

என்ன பந்து போடப் போகிறான் என்று தெரியவில்லை. நெஞ்சு அடித்துக் கொள்வது தெளிவாகக் கேட்டது. ஓடி வந்த அக்தர் கையைச் சுற்றி வீசினான். ஷார்ட் பிச். பேட்டை மறுபடி வீசினான்.

அய்யோ, அது ஸ்லோ டெலிவரி. பேட்டை அவசரப் பட்டு சுற்றியதால் விளிம்பில் பட்டு பந்து இரண்டு பனை மர உயரத்திற்கு மேலே போனது. கண்ணை மூடிக்கொண்டு ஓடினான். இரண்டாவது ரன்னுக்கும் திரும்பி ஓடினான்.

பந்து விழுமிடத்தில் மூன்று பேர் சூழ்ந்தனர். அஃப்ரிடி லீவிட் கேட்டு கடைசியில் கையிடுக்கில் தவற விட்டான். மறுபடி ஸ்டேடியம் திடீரென்று உயிர் பெற்ற மாதிரி கதறியது. தவற விட்ட பந்தை சல்மான் பட் எடுத்து கீப்பரை நோக்கி வீசினான்.

அங்கே பந்தை கலெக்ட் செய்ய யாரும் இல்லை. ஸ்டம்பை 1 செ.மீ இடைவெளியில் மிஸ் செய்த பந்து ஓடியது. இரண்டாவது ரன்னையும் பூர்த்தி செய்த அவன் தரையிலிருந்து மூன்றடிக்கு எம்பிக் குதித்தான். ஸ்டம்புகளில் ஒன்றை உருவிக் கொண்டு அவன் பார்ட்னரைக் கட்டிப் பிடித்தான்.

ரசிகர்கள் நிறுத்தாமல் அடித்தொண்டையில் கத்திக் கொண்டிருந்தனர். பாகிஸ்தான் வீரர்கள் ஒவ்வொருவருக்கும் கை கொடுத்துக்கொண்டே இருவரும் பெவிலியன் நோக்கி நடந்தனர். பாகிஸ்தான் கேப்டனுக்கு நாடு திரும்பியதும் விசாரணைக் கமிசன் உறுதி.

பெவிலியன் வாசலில் மொத்த இந்திய அணியும் இவர்களை வரவேற்க நின்றிருந்தது.

செல்போன் ஒலித்தது.

“ஹலோ?”

“டேய் பாஸ்கர், மேட்ச் பாத்தியா? லாஸ்ட் மினிட்ல ஜெயிச்சிட்டானுங்கடா. நான் எதிர்பார்க்கவே இல்லை. ஒரு செகண்ட் ஹார்ட்டே நின்னு போச்சி. மச்சி”

“ஹலோ நீங்க யாரு? என்ன வேணும் உங்களுக்கு?”

“சாரி சார். நீங்க பாஸ்கர் இல்லையா?”

“இல்ல சார். ராங் நம்பர்”

“சாரி சார். சாரி ஃபர் த டிஸ்டர்பன்ஸ்”

செல் போனை மறுபடி பையில் வைத்து விட்டு, சூப்பர் மார்க்கெட்டின் டி.வியில் இருந்து கண்ணை அகற்றிய அவன் முன்னாலிருந்த ஷாப்பிங் கார்ட்டைத் தள்ளிக் கொண்டு பில் கவுண்டரை நோக்கி நடந்தான்.

ஒவ்வொரு பொருளாக எடுத்து ஸ்கேன் செய்த அவள் கடைசியில் சொன்ன பில் பணத்துக்கு தன் பர்ஸில் இருந்து ஒரு க்ரடிட் கார்டை எடுத்து நீட்டினான். அவள் க்ரடிட் கார்டு மெசினில் தேய்த்து ப்ரிண்ட் செய்து கொடுத்த துண்டுச் சீட்டில் கையெழுத்துப் போட்டு விட்டு மறுபடியும் கார்ட்டைத் தள்ளிக் கொண்டு நடந்தான்.

“சார், ஆர் யூ இண்ட்ரஸ்டட் இன் சிட்டி பேங்க் கிரடிட் கார்ட் சார்” என்று துரத்திய க்ரடிட் கார்ட் சேல்ஸ்மேனை பொருட்படுத்தாமல் காரை நோக்கி நடந்தான்.

கார்ட்டில் முன்னால் உட்கார்ந்திருந்த குழந்தை அழத் தொடங்கியது.

“ஜோ ஜோ ஜோ.. எதுக்கும்மா அழற.. என்ன வேணும் பாப்பாக்கு?” என்று சமாதானம் செய்தான். குழந்தை விடாமல் அழுதது.

“என்ன கண்ணு எதுக்கு அழுகுற?” என்று குழந்தையை கார்ட்டில் இருந்து தூக்கினான்.

“அழக்கூடாதும்மா..” குழந்தையின் பேர் என்ன? யோசித்தான். எவ்வளவு யோசித்தாலும் பெயர் நினைவுக்கு வரவில்லை.

மறுபடி குழந்தையின் முகத்தைப் பார்த்தான். ‘யார் இந்தக் குழந்தை? இதுவரை பார்த்ததே இல்லையே?’ இப்போது சுற்றியும் பார்த்தான்.

‘எங்கே நிற்கிறேன்? என்ன இடம் இது? என் முன்னால் இருக்கும் ஷாப்பிங் கார்ட் யாருடையது? என் கார் எங்கே?’ அவனுக்குள் ஆயிரம் கேள்விகள். கையில் இருக்கும் குழந்தை விடாமல் அழுது கொண்டே இருந்தது.

பின்னால் ஆட்கள் ஓடி வரும் சத்தம் அதிகமாகிக் கொண்டே வருவதில் இவனை நோக்கி வருவதாகப் பட்டது. பின்னால் திரும்பினான்.

“என் குழந்தை, என் குழந்தை” என்று அழுது கொண்டே வந்த அந்தப் பெண் இவன் கையில் இருந்த குழந்தையை பிடுங்கினாள். அவளுக்குப் பின்னால் மூச்சு வாங்க ஓடி வந்த சற்று பருமனான ஆள் கையை வீசி இவன் தாடையில் வெடித்தான்.

“பரதேசி நாயே. பாக்க டீசண்டா இருக்க. புள்ள பிடிக்க வந்திருக்கியா?”

“இல்ல. நீங்..” பேச விடாமல் அடுத்த அடி விழுந்தது. அதற்குள் சிறிய கூட்டம் கூடி இருந்தது.

“இவங்களயெல்லாம் சும்மா விடக்கூடாது சார். நாலு மொத்து மொத்துனா தான் அடுத்து இப்பிடி செய்ய மாட்டானுங்க..” யாரோ ஒரு பிரகஸ்பதி கூட்டத்தில்.

“அய்யோ என்னத் தப்பா புரிஞ்..”

கூட்டம் கூடி தர்ம அடி கொடுக்கத் துவங்கியது. யாரோ தொலைபேசியில் காவல்துறையை அழைத்துக் கொண்டிருந்தார்கள்.

(தொடரும்)

எழுதியது ஷங்கர் (பலா பட்டறை)


”நிஜமா என்ன பிடிச்சிருக்கா ஸ்வா,”

 2 நாள்ல பத்தாவது முறையா கேட்டேன். தாமரை மொட்டு மாதிரி என் வலது கை விரல்களை ஒன்றாக தன் இடது உள்ளங்கையால் பிடித்து தனது நெஞ்சினில் வைத்துக்கொண்டே, உள்பக்கம் உதடு குவித்தவாறு ஒரு மோனப்புன்னகையோடு அவள் சொன்னது எதுவும் என் காதில் விழவில்லை

நான் திரும்பவும் நிஜமா என்று ஆரம்பித்தேன்...
”ஏய் இப்பதானே சொன்னேன், திரும்பவும் அதயே கேக்காதப்பா.”  மெதுவாய் இடது கையால் என் தலை கோதி இன்னும் நெருக்கம் காட்டினாள்.

எனக்கு பேரவஸ்த்தையாய் இருந்தது. நிறைய பூக்கள் மலர்ந்த மரத்தின் அடியில் திடீரென நம் மீது பூக்கள் மழையாய் பொழியும்போது ஏதோ ஒரு சந்தோஷம் உணர்வோமே, அட அதை விடுங்கள் பூக்களில்லாத மழையில் நனைந்திருந்த ஒரு மரத்தினடியில் காற்றின் வேகத்திற்கு மரம் சிலிர்த்து நீர்த்துளிகளால் சட்டென்று ஒரு  குளுமையுடன் சிலிர்ப்பு தருமே கிட்டத்தட்ட சாதாரணத்திற்கும், பைத்தியத்திற்கும் இடையிலான ஒரு நிலை.

தம்பிடிக்காசுக்கு பிரயோஜனமில்லாத வறிய இளமைக்காலம் என்னுடையது. என்ன எதிர்பார்த்து இந்த பேரழகி என்னிடம் இழைகிறாள்? ஐயோ யாராவது இப்ப போய் இதை நினைப்பார்களா? நிஜமாவே நீ லூசுதாண்டா மனசு அவளை பாரேன், பார்ரா என்று மைக் வைத்து உள்ளே அலறிக்கொண்டிருந்தது.

”என்ன யோசிக்கற நான் நல்லவளான்னுதானே? பொண்ணுங்களா வந்து உன்ன எனக்கு பிடிச்சிருக்குன்னு சொல்லக்கூடாதா, ம்..?”

அந்த மாநகராட்சி பூங்காவில் நிறைய பேர் எங்களை பார்த்தபடி நடை போட்டுக்கொண்டிருந்தார்கள். அவள் அணிந்திருந்த சட்டையின் முதலிரண்டு பித்தான்களை அழுத்திக்கொண்டு இன்னும் எனது வலது கை விரல்களை தாமரை மொட்டாகவே வைத்திருந்தாள்.

”ஏய் என்னாச்சு, யாரையும் பார்க்காத, த பார் நானே கவலபடல, நீ ஏன் பொண்ணுங்க மாதிரி சுத்தி சுத்தி பார்த்துகிட்டிருக்கற.”

 வரிசையான, கறைகளில்லாத வெண்மை நிற பற்கள் தெரிய ஸ்வா என்னை பார்த்து சிரித்த சிரிப்பில் நான் மெதுவாய் என் கைகளை அவளிடமிருந்து விடுவித்துகொண்டேன். கையில் கர்ச்சீப் இல்லை வியர்த்த முகத்தை கைகளால் துடைத்த போது அவளின் வாசம் என் உள்ளங்கைகளின் மூலம் என் முகத்தில் பரவியது.

”என்ன பவ்டர் யூஸ் பண்ற ஸ்வா?”
“ நத்திங் ஸ்பெஷல் இங்க கிடைக்கிறதுதான்.” அவள் பெயர் சொன்னாள் எனக்கு ஆச்சரியமாக இருந்தது, நானும் யூஸ் பண்னி இருக்கிறேன் ஆனால் இந்த வாசம்.

எனக்கு எல்லாமே புதுசாக இருந்தது, அவளுக்கு எதிலும் பயமில்லை, என் பயங்களை அந்த உள்ளுதட்டு மோன சிரிப்பில் ஊடே குருகுருப்பாய் பார்த்துக்கொண்டிருந்தாள். சேர்ந்தார்போல நான்கு வார்த்தை ஆங்கிலத்தில் பேச வராது எனக்கு, அவளோ தடி தடியாய் ஆங்கில கதை புத்தகங்கள் படிப்பவள்.

”சரி இப்ப என்ன எனக்கு உன்ன நிஜமா பிடிச்சிருக்கான்னு தெரியனும் அவ்ளதானே?” இப்பொழுது நான் சிரித்தேன், ஆமாம் என்று தலை ஆட்டினேன்.

”சிம்பிள்டா அடிக்கடி உன்ன பஸ் ஸ்டாப்ல பார்த்திருக்கேன், உன் ஃப்ரெண்ட்ஸ்லாம் ஸூப்பரா டாவடிக்க நீ மட்டும் தலை கூட நிமிர்த்தாம அமைதியா நின்னுகிட்டிருப்ப.”

” அப்ப நீயும் பஸ்ல டைய்லி என்ன பார்ப்பியா?”

“ ம்ஹும்.. சில சமயம்தான், எங்க அப்பாகூட மோஸ்ட்லி கார்ல போய்டுவேன், ஆனா அப்பவும் உன்ன பார்த்திருக்கேன்.”

“ அது மட்டும்தானா? ”

“ஹேய்..இது என்ன காதல் பிஹெச்டியா? ஹாங்..”மீண்டும் சிரிப்பு.

 ” அது மட்டும்னு இல்ல நான் போல்டான பொண்ணுதான், என் வீட்டு பாக் ஸைட்ல என்ன டாவடிக்கிற பக்கத்து வீட்டு பையன கலாட்டா பன்றதுக்காக, பொறுமையா ஒரு தம் அடிச்சிருக்கேன். என்ன பஸ்ல இடிச்சவன்கிட்ட இன்னும் பக்கத்துல வந்து இடிங்க உங்க அம்மாவ இடிக்கறமாதிரியே இருக்கும்னு சொல்லிருக்கேன்.”

நான் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்துகொண்டேன். திரும்பவும் சிரித்தாள், இந்தமுறை மொத்த பார்க்கும் எங்களை பார்த்ததுபோலவே இருந்தது எனக்கு.

”ஆனா உன்ன பார்த்த உடனே எனக்கு ரொம்ப பிடிச்சிரிச்சு, ஐ டோண்ட் நோ,,சம் திங் ஸ்ட்ரேன்ஜ், இட்ஸ் டோட்டலி நியூ ஃபார் மீ டூ...”

 என் முகம் மாறுவதை கவனித்து ..

”ஓகே ஓகே உனக்கு இங்கிலீஷ் தெரியாது, நீ ரொம்ப படிக்கல, எனக்கு பஸ் டிக்கெட் எடுக்க கூட காசில்ல ப்ளா ப்ளா சாரி சாரி சாரி.”

 எனக்கு உள்ளே குத்தியது. அப்போதுதான் கவனித்தேன் இரண்டு போலீஸ்காரர்கள் எங்களை நோக்கி வருவதை. ஸ்வா என் கையை பிடித்து ”உட்கார் எழுந்திருக்காத” என்றாள்,

”டேய் நீ இங்க இருக்கியா?”

ஒரு கான்ஸ்டபிள் கொத்தாய் என் சட்டையை பிடித்து பளார் என்று அடித்தார், கீழே விழும்போதே தலை சுற்றியது, சுதாரிப்பதற்குள் நங் கென்று எதோ தலையில் பட்டது..ப்ளாக் அவுட் டோட்டல் நிசப்த்தம்

“சொல்லு ஏன் ஸூப்பர் மார்கெட்ல குழந்தைய தூக்கிட்டு போன?”

மெல்ல சுற்று முற்றும் பார்த்தேன், எப்போது இங்கே வந்தேன், இவர் என்ன கேட்கிறார்? உடலெல்லாம் வலித்தது, இன்ஸ்பெக்டர் டேபிளில் இந்தியா அபார வெற்றி பாகிஸ்தானை வீழ்த்தியது தினசரியில் பெரிய போட்டோவுடன் படபடத்துக்கொண்டிருந்தது இந்த படம் எங்கயோ பார்த்தோமே..

”டேய் உன்னதான் கேக்கறேன்.. ”

விடர் இடு சுடர் படர் பொலம் புனை வினைமலர்
தெரி திர டெரி யுருளிகன மிகு முரண் மிகு
கடறரு மணியொடும் முத்து யாத்த நேரணி
நெறி செறி வெறி உறு முரல் விறல் வணங்கு அணங்கு வில்
தார் அணி துணி மணி வெயில் உறழ் எழில் புகழ் அலர் மலர்மார்பின்
எரி வயிர நுதி நுதி எறி படை எருத்து மலை இவர் நவையினிற்
றுணி படல் இன மணி இயலெறும் எழிலின்
இசை இருள் அகல முறு கிறுகு புரி ஒரு புரி நாள்மலர்
மலர் இலகின வளர் பரிதியின் ஒளி மணி மார்பு அணி
மணம் மிக நாறு உருவின விரை வளி மிகு கடு விசை

பெரும் குரலெடுத்து யார் பாடுவது? அட எப்போது மேசையில் ஏறினேன், எதிரில் இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியில்,, நானா..னா நானா பாடுகிறேன்...அப்படியே எகிறி குதித்து வாசலை நோக்கி ஓடினேன்..

”ய்யேய் அவன பிடிங்கப்பா...”

யாரோ துரத்திக்கொண்டு வரும் சத்தம் கேட்டது, என்னை தாண்டி சென்ற காரில் ஒரு ஆள் என்னை பார்த்து ”அவந்தான் வண்டிய திருப்பு பிடி..”

 நிற்காமல் ஓடிக்கொண்டே இருந்தேன். வெளிச்சம் கண்ணை கூசியது . ஆமா நான் ஏன் ஓடிக்கிட்டிருக்கேன், எங்க போயிடிருக்கேன்.. திடீரென்று வளைவில் திரும்பிய பஸ்சில் ரன்னிங்கில் ஏறி மெல்ல எட்டிப்பார்த்தேன்...

”ஹலோ.”.பஸ்ஸில் யாரோ கூப்பிட்டார்கள்.
    

(தொடரும்)





’ஹலோ, இப்படியா ஒடற பஸ்ஸில ஏற்ரது?, எதாச்சும் ஆனா என்னாகறது?’ கேட்டது ஒரு அழகிய பெண்.

என் குழப்பம் இன்னும் அதிகமாகியது.... என்ன ஆச்சு எனக்கு, ஏன் என்னை எல்லாம் துரத்துகிறார்கள்?

பக்கத்து சீட்டில் இருந்த பெண் விழி விரிய, ‘என்னண்ணா ஆச்சு இங்க உக்காருங்க’ என கூப்பிட்டு பக்கத்தில் உட்கார சொல்ல தயக்கமாய் உட்கார்ந்தேன்.

’ஏன் இப்படி பண்றீங்க? ஏன் இப்படி அலங்கோலமா இருக்கீங்க? என்ன ஆச்சு? இப்ப எங்க இருக்கீங்க? எங்கெல்லாம் தேடறாங்க தெரியுமா?’ன்னு விடாம கேட்க, பைத்தியமே பிடித்துவிடும் போலிருந்தது.

‘போலிஸ் எல்லாம் உங்கள தேடிகிட்டு வந்தாங்க, எல்லாரும் கதிகலங்கி போயிருக்காங்க’ன்னு இன்னும் சொல்லிக்கொண்டே போக,

’ஆமாம், நீங்க யாரு? சத்தியமா யாருன்னே தெரியல’ என சொன்னேன்.

’நான் கோமதின்னா!, அய்யயய்யோ, ஏன் இப்படி கேக்குறீங்க, பக்கத்து வீட்டுப்பொண்ணு, உங்க செல்போன் என்னாச்சு, எல்லாரும் பைத்தியம் பிடிச்ச மாதிரி தேடிகிட்டிருக்காங்க ஒரு நிமிஷம்’னு சொல்லிட்டு அதோட செல்போன்ல நம்பர அழுத்தி,

‘அம்மா நான் கோமதி பேசறேன், அண்ணன் கூடத்தான் இருக்கு, ஓரற பஸ்ஸில வந்து ஏறுச்சி, ம்... இந்தா பேசுங்க’ன்னு கொடுக்க எனக்கு மண்டையே வெடிச்சிடும் போல இருந்தது.

‘எப்படிப்பா இருக்க, எங்கெல்லாம் தேடறது?ன்னு அழ ஆரம்பிக்க குழப்பம் இன்னும் அதிகமாச்சு. ‘அய்யோ, சத்தியமா எதுவுமே புரியல, அம்மான்னு சொல்றீங்கன்னு புரியுது, எல்லாம் ஒரே குழப்பமா இருக்கு’ன்னு சொல்லிக்கொண்டிருக்கும்போது, பஸ்ஸைத்தாண்டி அந்த கார் குறுக்கே நிற்க, டிரைவர் சட்டென பிரேக் அடித்தார்.

எல்லோரும் தடுமாற, நின்றிருந்த சிலர் முன் பக்கமாய் விழ, உட்காந்திருந்தோர் முன் கம்பிகளில் இடித்துக்கொள்ள, ஒரு குழந்தை வீலென கத்த, முன் வழியே காரிலிருந்து இறங்கிய இரண்டு பேர் என்னை நோக்கி அவசரமாக வந்தார்கள்.

சட்டென படியின் வழியே செல்போனை கையில் எடுத்துக்கொண்டு இறங்கி அவர்கள் இருவரும் என்னை துரத்த பேய்த்தனமாய் ஓட ஆரம்பித்தேன்.

மூச்சிறைக்க, இதயமே நின்றுவிடும் போலிருந்தது. உயிர் பயம் மற்றும் ஏதோ ஒன்று செலுத்த அருகேயிருந்த ஒரு சிறிய சந்தில் நுழைந்து பலவிதமாய் மாறி மாறி ஓடினேன்.

கடைசியாய் முடியாமல் அங்கிருந்த ஒரு திறந்திருந்த கேட்டின் வழியே உள்ளே நுழைந்து சுவற்றில் பல்லி போல் ஒட்டி பதுங்கி கொண்டேன். தபதவென என்னை தாண்டி செல்லும் சத்தம்.

அப்படியே கொஞ்ச நேரம் கிடக்க சப்தம் எதுமில்லாமல் இருந்தது. அயர்ச்சியில் மயங்கிய நிலைக்குப் போக ஆரம்பித்த நிலையில்,

‘அய்யோ அப்பா, இங்க பாருங்க ஒருத்தன் மயங்கி கிடக்கிறான்’ என ஒரு பெண்ணின் குரல். மெல்ல மயக்கமாகிக்கொண்டிருந்தேன்...

(தொடரும்)


பாகம் - 04

எழுயதிது ஹாலிவுட் பாலா (அக்கரைச்சீமை)



பெத்டினின்... எஃபெக்டில்... ஹாலூஸினேஷன் என்னை துண்டாடிக் கொண்டிருந்தது. என்னென்னவோ காட்சிகள். வைட் ஆங்கிள் கோணங்கள், கொலாஜ் கலவைகள், பமீலா ஆண்டர்ஸன்.... ச்சே... அவள் கிழவி..., மேகன் ஃபாக்ஸ்....

...மூளை ஓவர்டைமில் வேலை செய்ய, காட்சிகள் மாறிக் கொண்டே இருந்தன. சிலக் காட்சிகளின் வசனங்கள் திரும்பத் திரும்ப வந்து கொண்டேயிருந்தன. எத்தனை முயற்சித்தும் என்னால்... என் கை-கால்களை அசைக்க முடியவில்லை. இமைகள் எண்பது கிலோவில் கனத்தது.

எங்கேயிருக்கிறேன்?? எங்கே ஆரம்பித்தது..?? எல்லாம் குழப்பம்!! ரிலாக்ஸ் மேன். நினைவுக்கு கொண்டு வர எத்தனை முயன்றும் முடியவில்லை. சந்துகளில் ஓடியது மங்கலாக கிடைத்ததும்.... மெதுவாக.. நினைவுகளை கிளற ஆரம்பித்து, backtrack செய்ய ஆரம்பித்தேன்.

.. சந்து, பஸ், செல்ஃபோன், கார் துரத்தல், போலீஸ் ஸ்டேஷன், “ஏன்டா குழந்தையை கடத்துன?”... வாட்? நானேங்கே கடத்தினேன் - ஸூப்பர் மார்கெட், கார், ஸ்வாதி...... ஸ்வாதி... ஸ்வாதி.....!

ஸ்வாதியின் மணம், என் மனதை இன்னொரு இடத்திற்கு எடுத்துச் சென்றது. மாநகராட்சிப் பூங்கா!! மை காட் அங்கயும் என்னை போலீஸ் அடிச்சதே...

காரை நோக்கி நடந்த நியாபகம் இருக்கிறது. அதே சமயம் ஸ்வாவிடம் என் ஏழ்மையை பேசியதும் மங்கலாக நினைவு வந்தது. எது நிஜம், எது கனவு என பிரிக்க முடியாமல் தவிக்க ஆரம்பித்தேன்.

எண்பது கிலோவை சிரமத்துடன் தூக்கியதும்... மங்கலாக காட்சிகள் தெரிய ஆரம்பித்தன.


ஒரு படுக்கையில் இருப்பது தெரிந்தது. சுற்றிலும் ஏகப்பட்ட ஒயர்கள். எனக்குள் சலைன் இறங்கிக் கொண்டிருந்தது. இது என்ன வாசனை? பென்தட்டால்? க்ளோரின்?? எதுவாகினும் அது என் வயிற்றை பிசைந்தது. எந்த நேரமும் வாயில் எடுத்துடுவேன்! இது ஸ்வாதிவின் வாசனையில்லை. ஸ்வா எங்கே?

--அப்பா... அவனுக்கு மயக்கம் தெளிஞ்சிகிட்டு இருக்கு.

--மானிட்டர்ல பார்த்துக்கிட்ட் இருக்கேன். முழுசா தெளிய இன்னும் 1 மணி நேரமாகலாம். எதுக்கும்... இன்னொரு 10c ட்ரிப்பில் ஆட் பண்ணு

--தாங்குமா?

--பார்க்கலாம். டெஸ்ட் சப்ஜக்ட் தானே.

அப்பொழுதுதான் அவர்களை கவனித்தேன். அறையின் மூலையில்..., மானிடரில் எண்களையும், என் எண்ணங்களையும் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார்கள். முகத்தில், ஆப்ரேஷன் செய்யும் போது அணியும் முகமூடி.

அவளுக்கு 25 வயதிருக்குமா? கழுத்து சார்ந்த இடங்கள் அப்படித்தான் பறை சாற்றின!! ச்சை..! எந்த நேரத்தில் என்ன நினைவு!! இவர்கள் என்ன செய்கிறார்கள்? எப்படி இங்கே வந்தேன்? நான் டெஸ்ட் சப்ஜட்டா? என்ன டெஸ்ட்?

அப்பா என்றழைப்பட்டவர்.. ச்சீ வன்..., என் அருகில் வந்தான். என் தலையை வருடினான். அப்பொழுதுதான் அதை உணர்ந்தேன். என் தலை மொட்டையடிக்கப் பட்டிருந்தது.

-- எழ் பழ் போழ்ற்??
-- வாட்??
-- எழ் பழ்ன போழ்றீழ்ங்??

என் நாக்கு குழறியது.

--சின்னதா ஒரு ஆப்ரேஷன். அப்புறம் பாரு. மொத்த உ.......

ஆப்ரேஷனா???

அவள் இப்பொழுது முழுமையாக என்னை நோக்கித் திரும்பினாள். அவள் கையில் என்ன?? ஷூட்...... அது.... அது...........

நான் திமிற ஆரம்பித்தேன். கை கால்களை அசைக்க முடியவில்லை. அப்பொழுதுதான் இன்னொன்றை கவனித்தேன். அவைகள் சங்கிலியில் பிணைக்கப் பட்டிருந்தன.

வாட் த..............

(தொடரும்)


பாகம் - 05

எழுயதிது வினோத் கௌதம் (ஜூலை காற்றில்)

கைவிலங்கை பார்த்தவுடன் கன்னபின்னவென்று 'கத்தியவன்' சிறிது நேரத்தில்மயக்கமானான்.

"இது முடியும்னு நினைக்கிறிங்களா"..திவ்யா.

"பாப்போம்..ப்ரபோனோனல்750 xmg தான் கொடுத்து இருக்கேன்..அவனுக்குமுழுசா அவன் யாருன்னு தெரிய குறைஞ்சது ஒரு 36 மணி நேரமாச்சும்ஆகும்..ஆனா அதுக்குள்ள அவன் ஏற்கனவே கடந்து வந்த விஷயங்களைமறுப்படியும் பார்த்தானா அவனால சில விஷயங்களை நியாபகப்படுத்தமுடியும்.."

"ஆனா அவன பார்கிறதுக்கு ரொம்ப பாவமா இருக்குப்பா..'இது' எப்ப தான்முடியும்"..திவ்யா.

"எனக்கும் தெரியாது..ஆனா 'அவங்க' எதிர்ப்பார்க்கிற விஷயம் கிடைக்கிறவரைக்கும் இவனை நிம்மதியா விடமாட்டாங்க..இதுக்கு அவன் போலீஸ்கஸ்டடில இருந்திருக்கலாம்..தப்பிச்சு வந்து இவங்ககிட்டேயே மாட்டிக்கிட்டான்.."
.........................................................................

"யேய்..இது சரியாப்ப்படும்னு நினைக்கிறியா..நம்ம குரூப்ல இல்லாத ஆளுங்களா 'இவன' எதுக்கு செலக்ட் பண்ண.."..ராஜேஷ்.

"இல்லை..இவன் தான் சரிப்பட்டு வருவான் ..எனக்கு தெரியும்..''டீல்" முடிஞ்சவுடனே பாரு உனக்கே தெரியும்..ஆமாம் தலையுல எதாச்சும் 'ஆப்ரேட்' பண்ண தழும்பு தெரியுதா..".. Mr.X

"இல்லை"..ராஜேஷ்..

"குட்..ஓகே..நான் சொல்றத கவனமா கேளு..அவன விட்டு ரொம்ப தூரம் போனாஅவன் தலையுல இருக்குற 'சிப்'ல இருந்து வர சிக்னல் உன்னால ரிசிவ் பண்ணமுடியாது..ஸோ, ஒரு கிலோமீட்டர் தூரத்தில் நீ இருக்கிற மாதிரிபார்த்துக்கோ..ஆனா தப்பிதவறி கூட அவன் பக்கத்தில் எந்த காரணத்தைகொண்டும் போகாத..அவன் 'அதை' எடுத்து முடிக்கிற வரைக்கும்..நீ அவன 'அங்க' விட்டுட்டு விலகிடு..நீ விலகின நேரத்தில் இருந்து அவனுக்கு சுயநினைவு வரஒரு பத்து மணி நேரமாச்சும் ஆகும்..ஸோ, நீ அவனை விட்டு விலகினநிமிடத்தில் இருந்து அவன ஷார்ப்பா வாட்ச் பண்ணு..அவனுக்கு 'சுய நினைவு' வந்துருச்சுன்னு அவன் நடவடிக்கையை வச்சு உனக்கு எப்ப சந்தேகம் வருதோஅப்ப இருந்து இன்னும் க்ளோசா வாட்ச் பண்ணு..அதை விட ரொம்ப முக்கியம்அதுவரைக்கும் நீ அவன் கண்ணுல படவே கூடாது.."..Mr.X

"அதுசரி நடுவுல 'இவன்' எதுவும் எங்கிட்ட கேக்கமாட்டான்ல யாருக்காச்சும்சந்தேகம் வரப்போகுது"..ராஜேஷ்.

"நீ போய் சேருற வரைக்கும் ஒரு வார்த்தை பேசமாட்டான்..நீ பண்ண வேண்டியதுஎல்லாம் அவன கைய பிடிச்சு கூப்பிட்டுப்போ அது போதும்''...Mr.X

"சரி நான் பார்த்துக்கிறேன் இதுக்கபுறம்.."..ராஜேஷ்.

" விசா,பாஸ்போர்ட் எல்லாம் சரியாய் இருக்குல..எல்லாத்தையும் செக்பண்ணிட்டியா.."...Mr.X

"எல்லாம் ஓகே..நான் உனக்கு 'கேப் டவுன்' போய் சேர்ந்தவுடனே கால்பண்ணுறேன்..இப்ப 'கட்' பண்ணுறேன்.."..ராஜேஷ்.

சுயநினைவற்ற நிலையில் அவனும், ராஜேஷும் ஏர்போர்ட்க்குள் நுழைந்தனர். எதிர்ப்பர்த்தப்படியே 'செக்கிங்கில்' எந்த கெடுப்பிடியும் இல்லாமல் ராஜேஷும்அவனுடன் விமானத்தை அடைந்து அமர்ந்தனர்..அவனும் எந்த எதிர்ப்பும்இல்லாமல் பித்துப்பிடித்தவன் போல் ராஜேஷ் பின்னாடி கைபிடித்து வந்ததால்யாருக்கும் எந்த சந்தேகமும் வரவில்லை..

விமானம் சவுத் ஆப்ரிக்காவை நோக்கி பறக்க ஆரம்பித்தது..
.....................................................................

சுவாதி குழப்பத்தில் இருந்தாள்..அவள் மொபைல் அலறியது..

"ஹலோ..சுவாதி"

"சொல்லுங்க சுவாதி தான் பேசுறேன்"..

"என் பேரு ஆவுடையப்பன்..சிபிசிஐடி இன்ஸ்பெக்டர்..நாளைக்கு கமிஷனர்ஆபீஸ் வரை வந்து என்னை பார்க்க முடியுமா..உங்ககிட்ட சில கேள்விகள்இருக்கு..ஜஸ்ட் ஒரு இருபது நிமிஷம்"..

"...?"...சுவாதி.

' (தொடரும்)





பாகம் - 06

எழுயதிது கிஷோர்

விமானம் பறக்க தொடங்கி பத்து நிமிடங்கள் ஆகி இருந்தது.. அவனை அங்கேயே உக்கார சொல்லி விட்டு ராஜேஷ் எழுந்து டாய்லெட் சென்று விட்டு வந்து பார்த்த போது அவன் அதற்குள் தூங்கிவிட்டிருந்தான் .. ராஜேஷ் அவனை ஒரு முறை பார்த்து விட்டு கையில் இருந்த புத்தகத்தை புரட்ட துவங்கினான்.

அடுத்த இரண்டாவது நிமிடத்தில் விமானத்தில் அசாதாரண சூழ்நிலை உருவானதை போல தோன்ற அடுத்த நொடி இருக்கைக்கு மேல உள்ள விளக்கில் சீட் பெல்ட் அணிய வேண்டிய லைட் ஒளிர ஆரம்பித்தது.. பணிப்பெண்கள் வெளிறிய முகத்தோடு இயற்கை வனப்புடனும் செயற்கை சிரிப்புடனும் வந்து பயணிகளிடம் சீட் பெல்ட் அணிய சொல்ல ஆரம்பித்தார்கள்.

அதை தொடர்ந்து கேப்டனின் குரல்..

"dear passengers, we are returning to the chennai airport due to some techinical fault.
dont worry still flight is in control.
sorry for the inconvenience."

இது என்ன புது தலைவலி என்று நினைத்தவாறே ராஜேஷ் அவனை எழுப்பி சீட் பெல்ட் அணிய சொல்லிவிட்டு தானும் அணிய தொடங்கினான்.

அடுத்த பதினைந்தாவது நிமிடம் விமானம் சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கியது.. பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கபட்டு ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனர். ஸ்பீக்கர்ரில் விமானம் இரண்டு மணி நேரம் தாமதமாக புறப்படும் பயணிகள் சிரமத்திற்கு மன்னிக்கவும் என்று ஆங்கிலத்தில் அலறி கொண்டு இருந்தது.

அவனுடன் ஓய்வறையில் இருந்த ராஜேஷ் தனது செல் எடுத்து நம்பரை அழுத்தினான் ..
சில நொடிகளில் மறுமுனை நேரடியாக

"நீ இன்னும் பிளைட் ஏறலியா ?" என்று பதற்றமாக கேட்டது .

"இல்ல பிளைட் கிளம்பி திரும்ப சென்னை ஏர்போர்ட் வந்துடிச்சி.. ஏதோ பிரச்சனையாம்.. இரண்டு மணி நேரம் ஆகும்" - ராஜேஷ்

"ஓ! அவன் என்ன பண்றான்?"

"இதுவரைக்கும் ஒன்னும் பிரச்சனை இல்லை "- ராஜேஷ்

" சரி சொன்னது நியாபகம் இருக்குல்ல? அங்க போற வரைக்கும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை அவனுக்கு குடிக்க தண்ணி மட்டும் குடு .. அவன் தூங்குனாலும் எழுப்பி குடு.. வேற எதுவும் குடுத்துடாத.. மறந்துடாத இல்லனா அவனுக்கு உள்ள இருக்குற மருந்து தன்னோட வேலைய காட்ட ஆரம்பிச்சிடும்."

"ம்ம்.. நியாபகம் இருக்கு.. போற வரைக்கும் வரைக்கும் தாங்குவானா? இன்னும் கொஞ்சம் ஓவர்டோஸ் குடுத்து இருக்கலாமோ? "- ராஜேஷ்

"அவன செக் பண்ணி தான் குடுத்து இருக்கோம்.. இப்போ அவன் உடம்புல ப்ரபோனோனல் மட்டும் இல்ல புரிஞ்சிதா ? நீ சொன்னத மட்டும் செய்..
கிளம்பறதுக்கு முன்னாடி போன் பண்ணு"

"சரி" என்றான் ராஜேஷ்

மறுமுனை கட் ஆனது.
--------------------------------------------------------------------------

"சாரி சார்..எனக்கு நாளைக்கு மிக முக்கியமான வேலை இருக்கு.. வேணும்னா இன்னைக்கு வந்து உங்களை சந்திக்கலாமா ?"- ஸ்வாதி

"ஓகே வாங்க.. எப்போ வருவிங்க?" - ஆவுடையப்பன்

"சார். நான் கொஞ்சம் ஏர்போர்ட் வரைக்கும் போக வேண்டி இருக்கு கசின் ஊருக்கு போறா அவளை அனுப்பிட்டு அப்படியே வந்துடுறேன்.."

"சரி.. முடிஞ்ச அளவுக்கு சீக்கிரம் வர முயற்சி பண்ணுங்க"

"சரி சார்.." என்ற ஸ்வாதி குழப்பத்துடன் அழைப்பை துண்டித்தாள் .

------------------------------------------------------------------------
ஒரு மணிநேரம் ஆகி விட்டிருந்தது ..

ராஜேஷ் தன்னிடம் இருந்த தண்ணி பாட்டிலை எடுத்து அவனிடம் கொடுத்து குடிக்க சொல்ல அவனிடம் திரும்பினான்..
தலை கவிழ்ந்து உக்கார்ந்திருந்த அவனிடம் இருந்து மெல்லிய பேச்சு சத்தம்..
ராஜேஷ் அவன் பக்கத்தில் வந்து உன்னிப்பாக கேட்டான்.

எதுவும் புரியவில்லை..

என்ன இது இவன் பேசுறான்? போற வரைக்கும் எதுவும் பேசமாட்டான்னு சொன்னானுங்க .. என்னஆச்சி ? மருந்து வேலை செய்யலியா?
மெல்ல அவன் தாடையில் கை கொடுத்து அவன் முகத்தை நிமிர்த்திய ராஜேஷ் அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றான்.
--------------------------------------------------------------------------
அதே நேரம் ஏர்போர்ட் வாசலில்..

"சார் நான் ஏர்போர்ட் வந்துட்டேன்.. இன்னும் அரைமணி நேரத்துல இங்க இருந்து கிளம்பிடுவேன். நேரா உங்கள வந்து பார்கிறேன் என்று இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பனுக்கு தகவல் தெரிவித்தபடியே காரில் இருந்து இறங்கிகொண்டு
இருந்தாள் ஸ்வாதி ..
-------------------------------------------------------------------------
இவன எங்கயும் தனியா விடலையே .. இவன் கூடவே தான இருக்கேன்.. எங்க தப்பு நடந்துச்சி? என்று யோசித்தபடி.."ஹேய்.. என்ன ஆச்சி உனக்கு? " அதிர்ச்சியில் இருந்து மீளாத ராஜேஷ் அவனிடம் கேட்டான்.

அவன் கண்கள் இரண்டும் சிவந்து போய் இருக்க.. அவன் மூக்கில் இருந்து மெல்லிய கோடு போல ரத்தம் வழிந்து கொண்டு இருந்தது.. நிமிர்ந்த அவன் ராஜேஷ் கண்களை பார்த்து அதே வார்த்தைகளை முனகினான் ..இப்பொழுது அவன் சொல்வது கொஞ்சம் தெளிவாக கேட்டது..

அ.. ர்.. ஜூ .. ன்..

அ.. ர் .. ஜூன்..

அர்.. ஜூன்..

அர்ஜுன்..

(தொடரும்)..


பாகம் - 07

எழுயதிது சுப. தமிழினியன் (என் நாட்குறிப்பு)

ராஜேஷுக்கு ஒன்றும் புரியவில்லை, போனை எடுத்து கத்த துவங்கினான், என்ன கருமத்தை இவனுக்கு கொடுத்தீங்க, அவன் ஏதேதோ பேசிகிட்டு இருக்கான்...


சார் நீங்க என்ன பேசுறீங்க புரியல, தெளிவா சொல்லுங்க, அன்னைக்கு பாஸ்கர் தப்பிச்சதில இருந்து அவர் என்னைப் பார்க்கல, அவரைப் பாத்தா நானே உங்களுக்கு சொல்றேன். அவருக்கு என்ன ஆச்சு? ஏன் அவரைத் தேடுறீங்க?



"ஹே பாஸ்கர்" பெருங்குரலெடுத்து கத்தினாள் ஸ்வாதி.

அ ர் ஜூ ன்
கொஞ்சம் கொஞ்சமாய்

பா    ஸ்    க    ர்
ஆனது.

இது என்னடா புது குழப்பம், யாரிவள்? இவனுக்கு யாரையும் நினைவுக்கு வராதுன்னு சொன்னீங்க, ஆனா இவனைப் பார்த்து யாரோ ஒருத்தி கத்துறாளே நான் மாட்டிகிட்டேனா? போனில் கத்தினான், ராஜேஷ்.

மறுமுனையில், பதட்டப்படாம பொறுமையா சமாளி, அவன் நமக்கு முக்கியம், அப்புறம் அவனுக்குள்ள... , ட்ரிப்பை கேன்சல் செய்துக்கலாம், அவனை அங்க யார்கிட்டயும் பேசவிடாம நம்ம இடத்துக்கு தள்ளிகிட்டு வந்துடு.

ஸ்வாதி
ஸ்வாதி என்ன சொன்னீங்க?

பாஸ்கரைப் பாத்துட்டீங்களா?
எங்க பாத்தீங்க சொல்லுங்க
ஸ்வாதி.

பாஸ்கர் என்ன ஆச்சு உங்களுக்கு, ஏன் மொட்டை அடிச்சிருக்கீங்க? ஹேய் ஏன் அவரை இழுத்துட்டு ஓடுற?
ஸ்வாதி பாஸ்கரை நோக்கி ஓடினாள்,
ராஜேஷ் பாஸ்கரை இழுத்துகொண்டு ஓடினான்
ஹே என்னை விடு அவளை எனக்குத் தெரியும், நான் எங்கயோ அவளைப் பார்த்திருக்கேன். நீ யாரு?

டேய் மடையா உன்னை அவ்ளோ சுலபத்துல விட்டுட முடியாது, நீ எவ்ளோ பெரிய காரியத்தைப் பண்ணப்போற. உன்னை அவ்ளோ சீக்கிரத்துல விட முடியாது. அப்படியே இழுத்துக்கொண்டு காரை நோக்கி ஓடினான்.

சார் நான் ஸ்வாதிதான் பேசுறேன், ஏர்போர்ட்ல பாஸ்கரை ஒருத்தன் இழுத்துகிட்டு ஓடுறான், அவர் மொட்டை அடிச்சிருக்காரு, என்னை வித்தியாசமா பார்க்குறாரு. அவரை சுத்தி என்ன நடக்குது? சொல்லுங்க சார்.

ஸ்வாதி பொறுமையா இருங்க, நீங்க எப்படி ஏர்போர்ட் போனீங்க? ஸ்கூட்டர்லயா? கார்லயா? பஸ்லயா?

கார்.

நீங்க அவங்களை பாலோ பன்னுங்க, எங்க இருக்கீங்கன்னு தகவல் குடுத்துகிட்டே இருங்க, நான் வந்துடறேன்.

சார் அவங்க கார்ல கிளம்பிட்டாங்க.
எந்தபக்கம் போறாங்க?

வெயிட் பன்னுங்க நான் கார்ல கிளம்பினதும் சொல்றேன்,

டுவேர்ட்ஸ் கிண்டி

ஓக்கே, நான் நந்தனத்துல இருக்கேன், நான் வந்துகிட்டே இருக்கேன். அவங்க கார் நம்பர் என்ன? என்ன கார்? என்ன கலர்?

நியூ ரெஜிஸ்ட்ரேசன். இன்னும் நம்பர் வாங்கல போல

சான்ட்ரோ

ப்ளூ.

ஏர்போர்ட்ல அவனைப் பார்த்து ஓடி வந்த பொன்னு கார்ல பாலோ பன்னிகிட்டு வரா. அவளை என்ன பண்ணலாம்?

யார் அவ?

ஸ்வாதி,
பார்க்,
பெர்ப்யூம்,
போலீஸ்,
கோமதி,
சூப்பர் மார்க்கெட்,
பஸ்,
ராஜேஷ்

ஹேய் அவன் என்ன பேசிகிட்டு இருக்கான்?

ஏதேதோ உளறிகிட்டு இருக்கான்? பழைய நினைவுகள் வந்துடுச்சுனு நெனைக்குறேன்.

இப்போ எங்க இருக்கீங்க?

ஆலந்தூர்

சரி அந்த பொன்னை கேர் பண்ணிக்காத, நமக்கு அவன் தான் முக்கியம் அவனை பத்திரமா கொண்டு வந்து சேர்த்துடு, நீ போரூருக்கு வந்துடாதா? கிண்டில ப்ளைஓவர் மேல ஏறும் போது அவளை குழப்பி நீ வேற எதாவது வழில புகுந்துடு.

ஓக்கே.

இப்போ எங்க இருக்கீங்க ஸ்வாதி?  கிண்டி ப்ளை ஓவர் கிட்ட, அவங்க கார் ப்ளைஓவர்ல ஏறிடுச்சு.

ஓக்கே நாங்க எல்லா வழியையுமே பிளாக் பண்ணிட்டோம்.

ப்ளூ
சான்ட்ரோ கரெக்ட் தானே ஸ்வாதி

யெஸ் சார்.
(தொடரும்)

பாகம் - 08

எழுயதிது விசா (விசா பக்கங்கள்)

நீல நிற சான்ட்ரோ கிண்டி மேம்பாலத்தை தாண்டி போரூர் நோக்கி ஒரு சீறும் முதளை போல் போய்க்கொண்டிருந்தது. அதில் அர்ஜுனாகிப்போன பாஸ்கர் அவனை கடத்திக்கொண்டு போகும் ராஜேஷ். சான்ட்ரோவுக்கு ஏறக்குறைய அரை கிலோமீட்டர் இடைவெளியில் ஸ்வாதி அவர்களை துரத்திக்கொண்டிருக்கிறாள். இதை எல்லாம் பறவை கண்ணோடு பார்த்தபடி போலீஸ்.

“ராஜேஷ்....எங்க இருக்க...” - பாஸ்

“போரூர் பக்கம் போய்கிட்டு இருக்கேன்....” -காரில் இருந்தபடி ராஜேஷ்

“ராஜேஷ்...வீ ஆர் இன் டேஞ்சர்...சொல்றத கவனமா கேளு. நம்மள போலீஸ் டிரேஸ் பண்ணுது.”

“ஓ...ஷிட்...போலீஸுக்கு எப்படி....பப்ளிக்க பொறுத்த வரைக்கும் ஒரு நீல நிற சான்ட்ரோ வெயிட்டிங் பார் ரெஜிஸ்டிரேஷன். அதுல இரண்டு பேர் போயிட்டு இருக்கோம். அவ்வளவு தான் இதுல யாரு சந்தேகப்பட்டு போலீஸ் நம்மள துரத்துது.”

“அந்த பொண்ணு போலீஸுக்கு சொல்லியிருக்கலாம்.”

“பாஸ் அந்த பொண்ணா பாஸ்....?அவ அழகா இருந்தாளே. அழகான பொண்ணுங்களுக்கு தைரியம் இருக்குமா பாஸ்?”

“ஸ்டுபிட். உன் கேர்ள் பிரண்ட் அழகு தானே. தைரியமா உன்ன லவ் பண்ணல....லுக் நான் சொல்றத கவனமா கேளு. போலீஸ் நம்மள பாலோ பண்ணுது. எந்நேரமும் நம்மள நிறுத்தலாம். அதனால....”

“அதனால...”

“யோசி ராஜேஷ்...திருட்டு நகையோட ஓடிகிட்டு இருக்க. போலீஸ் உன்ன துரத்துது என்ன பண்ணுவ...?”

“சிம்பிள் பாஸ். சட்டுன்னு நின்னிடுவேன். போலீஸோட ஒரு அக்ரீமென்ட். திருட்டு நகையில ஆளுக்கு பாதி. வாழ்க்கையே ஜாலி.”

அவன் பேசிக்கொண்டிருந்தாலும் சாலையில் துல்லியமான கவனத்தோடு இருந்தான். முன்னால் சென்றுகொண்டிருந்த இரண்டு டிம்பர் லாரிகளில் ஒன்றை வலது புறமாகவும் ஒன்றை இடதுபுறமாகவும் முந்தியிருந்தான். டிரேட் சென்டர் வாசலில் போலீஸ். ஒரு நிமிடம் வியர்த்தது. சுதாரித்துக்கொண்டான். வேகத்தை விடவில்லை. அந்த பெண் எந்த காரில் பின் தொடர்கிறாளென்று யோசித்தபடியே போரூர் நோக்கி சீறிக்கொண்டிருந்தான்.

"முட்டாள். முட்டாள். திருட்டு நகையின்னா பிப்டி பிப்டி. நீ கடத்திட்டு போறது ஒரு சப்ஜெக்ட். மெடிக்கல் ரெக்கார்டு. திருட்டு நகையோட ஓடுறப்ப போலீஸ் துரத்தினா என்ன பண்ணணும். திருட்டு நகையை ஒரு இடத்துல எறிஞ்சிட்டு எதிருல இருக்குற பெட்டி கடையில ஒரு தம் பத்த வச்சிட்டு போலீஸ் நம்மள தாண்டி சர்..சர்...சர்ன்னு யாரையோ துரத்திகிட்டு அப்பாவியா ஓடுறத கூளா ரசிக்கணும்...."

"பாஸ் யு ஆர் எ ஜீனியஸ். "

“கார உடனே ஓரமா நிறுத்தி கதவ திறந்து சப்ஜெக்ட கீழ இறக்கி விடு. அவன் தப்பிச்சு போகட்டும். விட்டுட்டு யு டர்ன் பண்ணி மறுபடியும் கிண்டி பிரிட்ஜ் வா. வந்து என்ன கூப்பிடு.”

ராஜேஷ் புருவம் உயர...”பாஸ்....பாஸ்” என்று நிறுத்தினான்.

“என்ன?”

“பாஸ் இவன தப்பிக்க விட்டுடுறதா? பாஸ்.... இவன் தப்பிச்சிட்டா அப்புறம் எப்படி இவன தேடுறது. தொலஞ்சிடுவான். மறுபடியும் எ.பி. செக்யூரிட்டி ஆளுங்களுக்கு வீணா காசு குடுத்து தேட சொல்லணும். அவன தப்பிக்க விடுறது டேஞ்சர். டிரேஸ் பண்ண முடியாது. அவன காருலயே கடத்திட்டு வந்துடுறேன். என்னால சமாளிக்க முடியும் பாஸ்.”

“ராஜேஷ். என் கிட்ட விவாதம் பண்ணாத. டு வாட் ஐ சே...அவன தப்பிக்க விட்டுடு. லெட் ஹிம் கோ....”

டிரேட் சென்டரிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருந்த போது காரை ஓரமாக நிறுத்தினான். சாலையின் ஓரம் அடர்ந்த முட் புதர்கள். சப்ஜெட் ஆகிப்போன பாஸ்கர் முன் இருக்கையில் தலை தொங்க உட்கார்ந்திருந்தான். கார் நின்றவுடன் ஒரு திகிலடைந்த மானை போல் தலையை உயர்த்தி அங்கும் இங்கும் பார்த்தான். அவனாகவே கார் கதவை திறந்தான். வெளியில் இறங்கினான். அவனால் காலை ஊன்றி நிற்க முடியவில்லை. நன்றாக சுருட்டி வீசப்பட்ட பேப்பர் பந்து போல் சாலையில் விழுந்தான். அவன் கீழே விழுந்த அடுத்த நொடி கார் கதவு சாற்றப்பட்டு கார் பறந்தது. யூ டர்ன் எடுத்து மீண்டும் கிண்டி மேம்பாலத்தை நோக்கி.

கீழே விழுந்த பாஸ்கருக்கு கண்களில் பயம் ஹெட்லைட் போல் ஒளிர்ந்துகொண்டிருந்தது. அவன் கிடத்தப்படுவது கல்லறை என்றாலும் அங்கிருந்தும் குதித்து தப்பித்து ஓடவேண்டும் என்றே அவன் மூளை ஆணை பிறப்பித்துக்கொண்டிருந்தது. அவன் பலம் இழந்த கால்களை ஒன்றாக குவித்து எழ முற்பட்டான். வயிற்றின் அடிப்புறத்தில் வலிப்பது தெரிந்தது. கழுத்து நிமிர மறுக்கிறது. நான் என்ன ஆகிக்கொண்டிருக்கிறேன். அவன் எழுந்து நின்ற பிறகு தான் கவனித்தான். எதிர் திசையில் ஒரு போலீஸ் வாகனம் சைரனோட வந்துகொண்டிருக்கிறது. ஆயிரம் பேய்களின் ஓலம் போல் அந்த சைரன் அவன் காதுகளில் ஊடுருவி ஓடு என்று மூளை கட்டளையிட்டு காலுக்கு எப்படித்தான் சக்தி வந்ததோ ஓட ஆரம்பித்தான்.

சாலையில் அவன் தொடர்ந்து ஓடத்தொடங்கினான். ஒரு நிலைகுலைந்த மிருகத்தை போல் மிரண்டு ஓடினான். அவனை யாரும் கண்டுகொள்ளவில்லை. யாரும் அவனை நிறுத்தி விசாரிக்கவில்லை. எல்லோரும் வழிவிட்டு விலகினர். அவன் அந்த பாதையில் விடாமல் ஓடினான். மூச்சிரைக்க உயிரின் கடைசி துண்டை கையில் பிடித்தபடி ஓடிக்கொண்டிருந்தான்.......

-----------------------

நீல நிற சான்ட்ரோ கிண்டி மேம்பாலத்தை நெருங்கியபோது போலீஸ் அதை தடுத்தது. ராஜேஷ் கீழே இறங்கினான்.
"வாட் இஸ் த மேட்டர்?" ராஜேஷ் உற்சாகமாக கேட்டான்.

"உங்க கார செக் பண்ணணும்."

"தாராளமா."

ஒரு கான்ஸ்டபிள் கார் முழுக்க தேடிவிட்டு தோல்வி தழுவிய முட்கத்தோடு வந்தார்.

"உங்க பேரு."
"ராஜேஷ்."

"ஏர்போர்ட்டுலேருந்து ஒருத்தர கடத்திட்டு வந்தீங்களே...அவரு எங்க?"

"ஏர் போர்ட்டா...சார் நான் இப்போ தான் ஏர்போர்ட்டுக்கு போயிட்டு இருக்கேன்."

"விளையாட்டு இல்ல மிஸ்டர் ராஜேஷ். நீங்க கடத்திட்டு வந்த ஆள் எங்க?"

"நான் யாரையும் கடத்தல."

"அப்படியின்னா....யு ஆர் அன்டர் அரெஸ்ட். உங்கள கைது பண்றோம். உங்க கார ஓரமா பார்க் பண்ணிட்டு எங்க வண்டியில வாங்க."

"இன்ஸ்பெக்டர். எதுக்காக என்ன கைது பண்றீங்க. அரெஸ்ட் வாரென்ட் இருக்கா?"

"மிஸ்டர் ராஜேஷ். அரெஸ்ட் வாரன்ட் தேவையில்ல. உங்க டிக்கியில இருந்து எடுத்த இரண்டு கிலோ கஞ்சா பாக்கெட்ஸ் அது போதும்."

"என் காருல கஞ்சா. சார் என்ன அநாவசியமா ராங் டீல் பண்றீங்க."

"அரெஸ்ட் வாரன்ட் கேக்குற கிரிமினல்ஸ்க்கு நாங்க வச்சிருக்குற வைத்தியம் அபின் வாரன்ட். பேசாம வண்டியில ஏறுங்க. ஆள் கடத்தல் கேஸோட ஒழியட்டும். நார்க்காட்டிக்ஸ் வேண்டாம். நீங்க இன்னசன்ட்டுன்னு புரூவ் பண்ணினா தான் வெளிய விடுவான். நான் பெயிலபிள்."

ராஜேஷ் வேறு வழியில்லாமல் போலீஸ் ஜீப்புக்குள் ஏறினான்.

----------------------

பாஸ்கர் வெகு தூரம் ஓடிவிட்டிருந்தான். அதற்கு மேல் ஓட முடியாது என்றவுடன் ஒரு குப்பை மேட்டி தொம்மென்று விழுந்தான். சூரியனின் நிர்வாண வெயில் அவன் முகத்தை அப்பியிருந்தது. சரியாக ஒரு மணி நேரம் உறங்கியிருப்பான். அதற்குள் ஒரு ஆம்புலன்ஸ் வந்து அவன் அருகில் நின்றது. மூன்று பேர் ஸ்ட்ரெச்சர் சகிதம் இறங்கி அவனை அள்ளி போட்டுக்கொண்டு பறந்தார்கள்.

எம்.எம்.எக்ஸ் மெடிக்கல் பவுண்டேஷனின் மாடி அறையில் Dr. Nirmal Raj அமர்ந்திருந்தார்.
"சப்ஜெக்ட புடிச்சிட்டோம். ஆன் தி வே. "
"எப்படி இவ்வளவு சுலபமா?"

"சப்ஜெக்ட் எங்கேயும் தப்பிச்சு போக முடியாது. அவன் எங்க இருக்கான்னு சொல்லி இதோ இந்த மானிட்டர் துல்லியமா காட்டிடும். போரூர் ஜங்கஷ்ன்லேருந்து சரியா ஏழு கிலோமீட்டர் தூரம் ஓடியிருக்கான். நம்ம ஆம்புலன்ஸ் போயிருக்கு அள்ளிட்டு வர. "

"இது எப்படி சாத்தியம்."

"சப்ஜெக்ட்டுக்கு நாங்க முதல் முதலா கொடுத்த ஒரு மாத்திரை. Aphinil -X அந்த மாத்திரையில ஒரு சிப் இருக்கும். அந்த மாத்திர மோஷன் வழியா வெளிய வராது. வயித்துக்குள்ளயே இருக்கும். அந்த மாத்திரைக்குள்ள இருக்குற சிப் எப்பவும் ஒரு சிக்னல டிரான்ஸ்மிட் பண்ணிகிட்டே இருக்கும். அத வச்சு இந்த ஸ்க்ரீன்ல இருக்குற மேப்புல சப்ஜெக்ட் எந்த நேரத்துல எங்க இருக்கான்னு கண்டு புடிச்சிடலாம். அவனால் இந்த உலகத்த விட்டு எங்கேயும் தப்பிச்சு போக முடியாது. ஹீ இஸ் அன்டர் அவர் கன்ட்ரோல்.

----------------------

ராஜேஷை கமிஷர் அலுவலகத்தில் ஒரு தனி அறையில் அமர்த்தியிருந்தார்கள். திடீரென அறை கதவு திறந்துகொண்டது. இன்ஸ்பெக்டர் உள்ளே வந்தார். பிளேயரில் ஒரு சி.டி.யை சொருகினார்.

“மிஸ்டர் ராஜேஷ். இந்த வீடியோவுல மிக கஷ்டமான கிரிமன்ல்ஸ நாங்க எப்படி டீல் பண்ணினோம். எப்படி அவங்க கிட்டேயிருந்து உண்மைய வரவழைச்சோம் அப்படியிங்கற வீடியோ டேப் இருக்கு. அரை மணி நேரம் ஓடும். கஸ்டடி டார்ச்சர் எப்படி இருக்குமுன்னு ஒரு சின்ன டாக்குமென்ட்ரி.”

“ராஜேஷ்…. போன மாசம் ஒரு டெர்ரரிஸ்ட்….ரொம்ப நேரம் முரண்டு புடிச்சான். ரூம்ல அடச்சு இந்த வீடியோவ ஓடவிட்டோம். வெரி குட் ரெஸ்பான்ஸ். பத்தே நிமிஷத்துல பயம் குடல புடுங்க கதவ தட்டினான். உள்ள வந்தோம். முழு விபரத்தையும் கக்கிட்டான். நீங்களும் பாருங்க. அரை மணி நேரம் பாத்த பிறகும் உண்மைய சொல்ற எண்ணம் இல்லாம போனா உங்க டார்ச்சர் பரேடையும் அந்த வீடியோவுல எடிட் பண்ணி சேக்க வேண்டி வரும்.” என்றபடி வீடியோவை ஓட விட்டார்.

ராஜேஷுக்கு குளிர் ஜூரம் வருவது போல் இருந்தது. வீடியோ ஓடத்தொடங்கியது. நிர்வாணமாக இரண்டு பேர் படுத்திருந்தார்கள். அவனை சுற்றி போலீஸ் பூட்ஸ்.....ராஜேஷ் அலறினான்.

"பிளீஸ் ஸ்டாப் இட். நான் உண்மையை சொல்லிடுறேன்."

"நான் எம்.எம்.எக்ஸ் மெடிக்கல் பவுண்டேஷன்ல வேலை பாக்குறேன். நான் கடத்திட்டு வந்தது பாஸ்கர். அவன் ஒரு மெடிக்கல் சப்ஜெக்ட். எங்க ஆராய்ச்சிக்காக அவன பயன்படுத்துறோம். "

இன்ஸ்பெக்டர் குறுக்கிட்டார் "அவரோட அனுமதி வாங்கினீங்களா?"

"செத்தவன் கிட்ட எப்படி சார் அனுமதி வாங்க முடியும். பாஸ்கர் செத்து ஒரு மாசம் ஆகுது. பெங்களூர் ஹைவேஸ்ல ஒரு மாசத்துக்கு முன்னாடி ஒரு ஆக்சிடன்ட். வோல்வோ பஸ் ஒரு லாரியோட மோதி.... அது நடந்தப்ப எங்க மெடிக்கல் டீம் அங்க போயிருந்திச்சு. அப்போ அதிக உடல் சேதாரம் இல்லாத ஒரு பாடிய கவர்மென்டுக்கு தெரியாம கடத்திட்டு வந்தோம். அந்த ஆக்ஸிடென்ட்டுல பாஸ்கர் இறந்துட்டான். அவனோட பாடிய கடத்திட்டு வந்து அவனுக்கு உயிர் கொடுத்து இப்போ எங்க ஆராய்ச்சிக்கு பயன்படுத்திட்டு இருக்கோம்."

இன்ஸ்பெக்டர் ராஜேஷை ஆழமாய் பார்த்து சொன்னார்.

"சுத்த போய். அந்த ஆக்ஸிடென்டுல பாஸ்கர் சாகல. ஆக்ஸிடன்ட் நடந்தது உண்மை. அதுல பாஸ்கருக்கு அடி பட்டு மயக்கம் ஆனதும் உண்மை. ஆனா பாஸ்கர் அந்த ஆக்ஸிடன்ட்டுல சாகல. அதுக்கு என் கிட்ட கிரிஸ்டல் கிளியர் எவிடன்ஸ் இருக்கு. ஸ்வாதி. அவனோட அந்த பஸ்ல பிரயாணம் பண்ணின ஸ்வாதி....."

தொடரும்...


பாகம் - 09

எழுயதிது அ.மு. செய்யது (மழைக்கு ஒதுங்கியவை...)


 வ‌தை 1:

வீடியோவில் காண்பிக்கப்பட்ட வெற்றுடம்பு மனிதனின் குறியில் கொக்கி போட்டு இழுக்கப்பட்டதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த‌ ராஜேஷ் வாய் திறக்காமலா இருப்பான்.உடைந்த உண்டியலில் சில்லறைகள் சிதறுவது போல உண்மைகள் கொட்ட ஆரம்பித்தன.

லோ டெம்ப்ரேச்ச‌ர்ல‌ பாடிய‌ வைக்க‌ற‌துனால‌ செல்க‌ள‌ திரும்ப‌வும் உயிர்ப்பிக்க‌லாம்னு நினைக்க‌ற‌து திய‌ரிடிக‌லா வேணும்னா சாத்தியமாகலாம்.ஆனா இது இம்ப்ராடிக்க‌ல்.இந்த‌ கிரையோனிக்ஸ் எல்லாம் சும்மா ப‌ம்மாத்து வேல‌.."

"நோ இன்ஸ்பெக்ட‌ர்.இது எங்க‌ ட்ரீம்..எட்டு வ‌ருஷ‌ க‌னவு,தவம்,உழைப்பு.நானோ டெக்னாலஜில இதுவர யாரும் தொடாத லிமிட்ஸ்-அ நாங்க டச் பண்ணிருக்கோம்.இதுக்காக‌ எங்க‌ பாஸ்,டாக்ட‌ர் நிர்மல் எவ்ளோ க‌ஷ்ட‌ப்ப‌ட்ருக்காருன்னு கூட‌ இருந்து நான் பாத்துருக்கேன்." வலி வேதனையுடன் ராஜேஷின் குரலில் அழுத்தம் இருந்தது.

இது இயற்கைக்கு புறம்பானது தான்.இது சாத்திய‌மே இல்லாத‌ ஒன்னு.அப்படியே இது வொர்க் அவுட் ஆனாலும் பின்னால ஆபத்தான விளைவுகள ஏற்படுத்தும்.இத உடனே தடுத்து நிறுத்தணும்" இன்ஸ்பெக்டர் தனது விசாரணையின் அடுத்த கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தார்.

"சொல்லுங்க‌ ராஜேஷ்...உங்க‌ ரிசர்ச் சென்ட‌ர் எங்க‌ ந‌ட‌த்திட்ருக்கீங்க‌ ? எத்த‌னை பேரு இதுல‌ இன்வால்வ்ட்..?

***

வ‌தை 2:

ஸ்டான்ஃபோர்டு ஸ்டூடியோவின் அதிநவீன உபயம் போலிருந்தது ம்ருத்துவக்கூடம்.சோடியம் விளக்குகள் கூடத்தை ஒளிவெள்ளத்தில் மூழ்கடித்தன.டாக்டர் நிர்மல் நான்கைந்து கோர்ட் சூட் வெள்ளையர்களுடன் ருஷ்ய மொழியில் மானிட்டரைப் பார்த்து ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்.சென்னையில் இப்படி ஒரு இடம் வாய்ப்பே இல்லை.

மின்னல் கடந்தது போல ஒரு ஃப்ளாஷில் பாஸ்கருக்கு விழிப்பு தட்ட ஆரம்பித்தது. ஸ்வாதி !! ஸ்வாதி !!! முனக ஆரம்பித்தான்.இமைகளைத் திறந்ததும் அதில் பொருத்தப்பட்டிருந்த சென்சார் பல்லிளித்தது.அருகே இருந்தே கணினித் திரையில் அலைகள் பாய்ந்தன. பீப் சத்தம் கேட்டு டாக்டர் நிர்மல் தன் சகாக்களுடன் பாஸ்கரின் படுக்கையை நோக்கி விரைந்தார்.

"கய்ஸ்..சப்ஜெக்ட் கண் முழிச்சுடுச்சி !!! லெட்ஸ் ஸ்டார்ட் தி தெர்மல் இன்செர்ஷன்" கண் சிமிட்டினார்.

பாஸ்க‌ரின் சிந்த‌டிக் ப‌டுக்கை திடீரென‌ ஒரு க‌சாப்புக்க‌டை ம‌ர‌க்க‌ட்டையாகி, லேச‌ர் க‌ற்றைக‌ள் அவ‌ன் உட‌லை கூறு போட‌ ஆர‌ம்பித்த‌ன.கொடூர‌ வ‌லியில் எழும்பிய‌ அவ‌ன் குர‌ல் எதிரொலிக்காம‌ல் துளைக‌ள் போட்ட‌ அட்டையால் விழுங்க‌ப்ப‌ட்ட‌து.ரத்தக்களரியாக‌ செல்க‌ள் பிரித்து மேய‌ப்ப‌ட்ட‌ன‌.ந‌ர‌ம்புக‌ளில் ஆங்காங்கே அக்குப‌ஞ்ச‌ர் முறையில் IC-க்க‌ள் பொருத்த‌ப்ப‌ட்ட‌ன‌.என்ன‌ ந‌ட‌க்கிற‌து ?? இங்கே..!! நான் ஏன் இங்கே இருக்கிறேன்.மாஸ்க் அணிந்த‌ ப‌ச்சைப் பேய்க‌ள் யார் இவ‌ர்க‌ள் ? இவ‌ர்க‌ளுக்கு என்ன‌ தேவையிருக்கிற‌து ? ப‌னிக்க‌ட்டியில் வைத்த‌தைப் போல் உட‌ல் ந‌டுங்குகிற‌தே..நான் ப‌டுத்திருப்ப‌து என்ன‌ ஐஸ் கட்டியா ?

***


போலீஸ்,க‌மாண்டோ ப‌டையின‌ரின் வாக‌ன‌ங்க‌ள் 120 கீ.மீ ஐத் தாண்டி ப‌றந்து கொண்டிருந்த‌ன‌.

போரூர் செக்போஸ்ட்டை க‌ட‌ந்த‌தும் வேக‌ம் குறைய‌ ஆர‌ம்பித்த‌து. ஜீப்புக‌ள் நிறுத்த‌ப்ப‌ட்டு,க‌மாண்டோ ப‌டையின‌ர் ஒவ்வொருவ‌ராக‌ இற‌ங்கி சுற்றியிருந்த‌ வீடுக‌ளில் ப‌துங்க‌ ஆர‌ம்பித்த‌ன‌ர்.இன்ஸ்பெக்ட‌ர் வேர்க‌ட‌லை சிறுவ‌னை அழைத்து அந்த‌ பிர‌தான‌ சாலையின் சுர‌ங்க‌ப்பாதையில் "இயேசு அழைக்கிறார்" போஸ்ட‌ரை கிழிக்க‌ச் சொன்னார்.

எதிர்பார்த்தப‌டியே,சுவ‌ற்றில் நால‌ணா அள‌வு துளையில் ஒரு க‌ணினி மெள‌ஸின் ரோல்ல‌ர் ப‌ந்து செருகியிருந்த‌து.ஆட்காட்டி விர‌ல் கொண்டு அதை உருட்டிய‌ மறுக‌ண‌ம்,மெல்லிய‌ இசையுட‌ன் அந்த‌ அற்புத‌க்க‌த‌வு திறந்த‌து.Thats it !!!


***

எம்.எம்.எக்ஸ் மெடிக்கல் பவுண்டேஷனின் முத‌ல் த‌ள‌ம் சைர‌ன் ஒலியில் அதிர்ந்த‌து.மாடி அறையில் இய‌ங்கி கொண்டிருந்த‌ லின‌க்ஸ் திரைக‌ள் அபாய செய்திக‌ளை ப‌ர‌ப்பிக் கொண்டிருந்த‌ன‌.ஆப‌த்து !!!

"ந‌ம்ம‌ இட‌த்த‌ போலீஸ் க‌ண்டுபிடிச்சிடுச்சி..நம்ம கிரவுண்ட் ஃப்ளோர் 3M கதவ‌ இவ்ளோ சுல‌ப‌மா த‌மிழ்நாடு போலீஸ் ம‌ட்டுந்தான் ஓப்ப‌ன் ப‌ண்ண‌ முடியும்.

லெட்ஸ் கிக் ஆஃப் தி பேக்கிங் புரோகிராம் ! "

பாஸ்க‌ரின் சிந்த‌டிக் ஐஸ்க‌ட்டி படுக்கை ஒரு பெட்டியாக‌ உருமாறி அவனைச் சுற்றி சுவர் எழுப்பியது.ஆக்ஸிஜ‌ன் வால்வு பொருத்த‌ப்ப‌ட்ட‌து.ரிச‌ர்ச் சென்ட‌ரின் முத‌ல்த‌ளம், Maersk பெயர் ஒட்டப்பட்ட‌ துறைமுக‌ டிர‌க் ஒன்றில் அலேக்காக‌ அம‌ர்ந்த‌து. எந்நேர‌மும் த‌ப்பிப்ப‌த‌ற்கான டாக்டர் நிர்மலின் மின்ன‌ல் வேக‌ ஏற்பாடுக‌ள் இவை.

டாக்ட‌ர் நிர்ம‌ல் அன்ட் கோ, பெட்டியில் பாஸ்க‌ர், முத‌ல் த‌ள‌ க‌ருவிக‌ள் எல்லாம் ஒரே டிர‌க்கில்.டிரக் நகரின் இஞ்சி இடுக்குகளில் நுழைந்து சீறிப்பாய்ந்தது.வேகம்.ஒளியின் வேக‌த்தை தொட‌ முடியுமா? எத்த‌னித்தார்க‌ள். பிடிப‌ட்டால் மில்லிய‌ன் டால‌ர்க‌ள் அர‌சாங்க‌த்தின் பிடியில். திட்ட‌ம்,க‌ன‌வு,த‌வ‌ம் எல்லாம் த‌விடு பொடி. ஏற்கென‌வே செய்த‌ 20 ந‌ர‌ப‌லிக‌ளுக்கு ப‌தில் சொல்லியாக‌ வேண்டுமே !!!டாக்ட‌ர் நிர்ம‌லின் இத‌ய‌ம் ப‌ட‌ப‌ட‌த்த‌து. புரோஜெக்ட்டின் உச்ச‌ப‌ச்ச‌ திருப்ப‌த்தில், இப்ப‌டியாகி விட்ட‌தே. ராஜேஷ் !! கிராதகன்.இப்ப‌டியா உள‌றி கொட்டியிருப்பான்.அவ‌ன் க‌ழுத்தில் ச‌ய‌னைடு க‌ட்டி விட்டிருக்க‌லாம்.ப‌ர‌வாயில்லை.எப்ப‌டியாவ‌து த‌ப்பித்து விட‌லாம்.பாஸ்க‌ரின் உயிர் தான் ந‌ம‌க்கு இறுதி ந‌ம்பிக்கை.பாஸ்க‌ரின் கிரையோனிக் பொருத்த‌ப்ப‌ட்ட‌ உட‌ல் தான் ந‌ம‌க்கு த‌ங்க‌ முட்டையிடும் வாத்து. எங்கே பாஸ்க‌ர் ?!?! ஓ மை காட் ?!?!

ஐஸ்க‌ட்டியின் Frozen plug-in பிடுங்க‌ப்ப‌ட்டு த‌ண்ணீர் தேங்கியிருந்த‌து. பாஸ்க‌ர் மாய‌ம்.

டிரக்கின் வேக பிடி தளர்ந்தது. புறநகர் பகுதியை அடைவதற்கு முன்பாகவே தாம்பரத்தில் Maersk டிர‌க் போலிஸ் வாகனங்களால் சுற்றி வளைக்கப்பட்டது.

***

போலிஸ் கஸ்டடியில் சிக்கிய‌ டாக்டர் நிர்மல், பதற்றமாகாமல் அமைதியாக‌ திருவாய் மலர்ந்தார்.

"பாஸ்கரோட பாடியில இன்செர்ட் பண்ணியிருக்க Aphinil -X சிப் இன்னும் ஒரு மணி நேரத்துல வெடிக்கப் போவுது. அது மட்டும் வெடிச்சா தமிழ்நாடே அமிலக் காடாகும் !!..என்ன பண்ண போறீங்க ?"

( தொடரும் )


பாகம் - 10

எழுயதிது விதூஷ் (பக்கோடா பேப்பர்கள்)



"அவன் நிச்சயம் பைத்தியமாத்தான் இருக்கணும்.  நல்ல ஆத்மான்னு ஒண்ணு  உலகத்தில் இருந்தா அது அவ மட்டும்தான். அவளைப் போயி..." என்றார் இன்ஸ்பெக்டர். "ராஜேஷ். உண்மையச் சொல்லிரு. வெயில்ல ஓடியிருக்க  இல்ல..அதான் உளர்ற."

"நீங்களும் அவளைக் காதலிக்க ஆரம்பிச்சுட்டீங்க சார்...  அதான் நம்மளோட வீக்னஸ்" என்று உரத்து சிரித்தான் ராஜேஷ்.

ராஜேஷின் மூக்கில் குத்தினார் இன்ஸ்பெக்டர். ரத்தம் வரவில்லை. ஆனால் தலை விண்-விண்ணென்று தெறித்தது. "அம்மா..ஆ "என்றலறினான் ராஜேஷ். "அவங்கப்பா எவ்ளோ பெரிய டாக்டர் தெரியுமாடா... பொளந்துருவேன் உன்ன" இப்போது ராஜேஷின் உதடு லேசாய் புடைக்க ஆரம்பித்திருந்தது. வலியில் அழவேண்டும் போல இருந்தாலும் அடக்கிக் கொண்டு "ஸ்வாதிய நம்பாதீங்க. அவள பிடிச்சு விசாரிக்கறத விட்டு என்னையப் போயி... லூசு சார் நீங்க. சார் பொம்பள முதலைய பார்த்ததில்லேல்ல ... உங்க பேரு என்ன அர்ஜுனா" என்றபடியே சட்டையில் இருந்த பெயரைப் பார்த்து "அடுத்து நீங்கதான் சார்" கெக்கலித்து சிரித்தான்
==============================
மருத்துவமனையில் ஸ்வாதி குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தாள். ஒவ்வொரு முறை நர்சுகள் வரும்போதெல்லாம் "எப்டி இருக்காரு" என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.

இன்ஸ்பெக்டர் அவளை நோக்கி வந்து கொண்டிருந்தார்.  அசப்பில் தீபிகா படுகோனேவை நினைவூட்டினாள் அவள்.  "இவளைப் போயி... ச்சே. எப்படிப் பட்ட கிரிமினல் அந்த ராஜேஷ். தான் தப்பிக்க எப்படியெல்லாம் பேசறான் பாரு" என்று நினைத்த படியே, "என்ன மேடம். டாக்டர் ஏதும் சொன்னாரா" என்று கேட்டார் இன்ஸ்பெக்டர்.

"அர்ஜுன்...தேங்க் காட்.. வந்துட்டீங்க. நான் பயந்துட்டே இருந்தேன். கடத்தினவங்க மூலமா ஏதும் ஆபத்து வந்திருமோன்னு." என்றவாறே இன்ஸ்பெக்டரின் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.
=========================
ஐசியூ அறைக்குள்ளே "சீக்கிரம் அந்த ஆல்டர்நேட் இஞ்சக்ஷனை ஐ.வி.ல செலுத்துங்க. இல்லன்னா சப்ஜக்டின் பாடி வெடிச்சிரும். ஓடி வேறத் தொலைச்சிருக்கான். வேர்வையால பாதி மருந்து செயலிழந்து விட்டது. கமான் குவிக்... " என்றவாறே பாஸ்கரின் இடது புறங்கையை அழுத்திப் பிடித்துக் கொண்டார் டாக்டர். மருந்து நிரம்பிய சிரிஞ்சை புடைத்த நரம்புக்குள் செலுத்தினாள் நர்ஸ்.

"இன்ஸ்பெக்டர். நீங்க மட்டும் உள்ள வாங்க சார்" என்று அழைத்தார் டாக்டர். "ஒ மை காட்... பயங்கரமானவங்க சார் அவங்க. மெடிக்கல் கிரிமினல்கள் அதிகமாயிட்டே வராங்க. இதுனால எங்களைப் போன்ற நல்ல டாக்டர்களுக்கும் கெட்ட பேராகிடுது. பேஷண்டுகளை காப்பாத்தறது பெரிய சேலஞ்.. கோர்ட்டு கேசுன்னு அலைச்சல் வேற.. " என்று அலுத்துக் கொண்டே, "பேஷன்ட் உயிரை காப்பாத்தியாச்சு. நீங்க போய் பாக்கலாம்" என்றார்.

"டாக்டர் ! ஸ்வாதியையும் பாஸ்கரை பாக்க அழைத்துப் போகலாம் இல்லையா"

"ஒவ்வொருத்தராப் போயி பாருங்க. பேஷன்ட் கிட்ட எதுவும் பேசாதீங்க. இப்ப நல்லா தூங்கிட்டு இருப்பாரு" என்று டாக்டர் சொன்னதும், இன்ஸ்பெக்டர் ஸ்வாதியை நோக்கி ஒரு புன்னகை வீசி விட்டு "டோன்ட் வொர்ரி" என்று சொல்லிவிட்டு ஐசியூகுள்ளே போனார் இன்ஸ்பெக்டர்.

"ஸ்வாதி. இப்ப என்ன செய்யறது" என்றார் டாக்டர்.

"நீங்க பேசாம இருங்கப்பா. எல்லாம் நான் பாத்துக்கறேன்" என்றாள் ஸ்வாதி.
=======================================
"பாஸ்கர் பாஸ்கர்" என்று கிசுகிசுப்பாய் இன்ஸ்பெக்டர் கூப்பிட்டார்.

தேங்காய் எண்ணெய் வாசத்தோடு வந்த நர்ஸ்  "பேஷண்டை தொந்தரவு செய்யண்டாம்." என்றாள்.

"ம்க்கும்" என்று தொண்டையைச் செருமிக் கொண்டு இன்ஸ்பெக்டர் "சிஸ்டர். இருமலை அடக்க முடியல. கொஞ்சம் தண்ணீர் கொண்டு வரீங்களா" என்றார்

நர்ஸ் அவரை முறைத்துக் கொண்டே தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொடுத்தாள்.

பாஸ்கர் கண்கள் மூடிய விழிக்குள் லேசாய் அசைந்தது. "இதயத் துடிப்பைக் கேட்கலாமா...... சிஸ்டர் . கொஞ்சம் ஸ்டெத் கொடுங்க." என்றவாறே நெஞ்சில் தலைவைத்து சாய்ந்துகொண்டு, "பேசு பாஸ்கர்" என்றார் இன்ஸ்பெக்டர்.

"ஸ்வாதி ஸ்வாதி" என்றான் பாஸ்கர்.

"ஓ. ஸ்வாதியை பார்க்கணுமா" என்றபடியே "வெயிட். அவளை அனுப்புகிறேன்" என்று நகர்ந்து, கதவைத் திறந்து வெளியேறி,

"ஸ்வாதி. ஹீ வாண்ட்ஸ் யூ" என்று சொல்லி "தேங்க் யூ டாக்டர். நீங்க பெரிய மெடிகல் கிரிமினல் கும்பலை பிடிக்க உதவப் போறீங்க.. பாஸ்கர் இஸ் தி ஒன்லி விட்னஸ். அவரை பத்திரமா பாத்துக்கோங்க. மூன்று எஸ்.ஐ-களை ஸ்பெஷல் டியூட்டியில் இங்கேயே இருக்கச் செய்திருக்கிறேன்." என்று கூறிவிட்டு மூன்று எஸ்ஐகளையும் டாக்டருக்கு அறிமுகம் செய்து வைத்தார். ஸ்வாதியை பார்த்து "டேக் கேர் ஆப் ஹிம். அண்ட் யூ டூ.." என்று புன்னகைத்தார்.

"தேங்க்ஸ் அர்ஜுன்... உங்களை நான் அர்ஜுன்னே கூப்பிடலாமா. இப்போதுதான் நாம் நண்பர்கள் ஆகிவிட்டோமே" என்றாள் ஸ்வாதி கைகுலுக்கியபடி.

அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தார் இன்ஸ்பெக்டர் அர்ஜுன்.

ஐசியூவுக்குள்ளிருந்து மலையாள நர்ஸ் ஓடி வந்தாள். "டாக்டர் டாக்டர். ஆ ஆளு தப்பிச்சு ஓடிட்டான்..:" என்றவள்..

"ஒஹ். மை காட். லெட்ஸ் டிரேஸ் ஹிம் அவுட்.. ரொம்ப தூரம் போயிருக்க முடியாது. சாயந்திரத்துக்குள்ள புடிச்சிரலாம்" என்றவாறே விரைந்தார் இன்ஸ்பெக்டர் அர்ஜுன். மூன்று எஸ்ஐகளும் பின்னாலேயே ஓடினார்கள்.

தன் கைபேசியை எடுத்து "மிஸ்டர் எக்ஸ். மறுபடி சப்ஜெக்ட் தப்பிச்சிட்டான். அவனைத் தேடுங்க" என்று கிசுகிசுத்தாள் ஸ்வாதி.

பாஸ்கர் அடையார் அருகில் இருக்கும் கூவம் சந்துகளில் நுழைந்து ஓடிக் கொண்டிருந்தான். இருளத் துவங்கியது. வயிறு வலிக்க ஆரம்பித்தது. குப்பையில் கிடந்தப் பழையச் சீலையைப் போர்த்திக் கொண்டு டீக்கடை பெஞ்ச் ஒன்றில் சாய்ந்துக் கொண்டான்.

டீக்கடையில் "இன்ஸ்பெக்டர் அர்ஜுன் மாயம்" என்றத் தலைப்புச் செய்தியோடுத் தொங்கிக் கொண்டிருந்தது மாலைமுரசு.

"அந்த பாஸ்கரைத் தேடித் பிடிங்க..எல்லாம் தெரிஞ்சிரும்" என்று ஆணைகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்தார் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன்.


(முடிந்தது)

வணக்கம் - அறிமுகம்





வணக்கம் நண்பர்களே,

நிறைய தொடர் இடுகைகள் வருகின்றன, ஒரே பதிவரோ, ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவர்களோ எழுதும் கதை, கட்டுரை, உடல் நலம், வாழ்வியல், இன்னும் பல தலைப்புகளில் வரும் பதிவுகளை மொத்தமாய் படிக்கவே இந்த தளம்.

நன்றி.